சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணம், அந்த படத்தில் உள்ள சில கேரக்டர்கள்தான். கதை, திரைக்கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினால்தான், படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரும். பெரிய அளவில் வரவேற்பையும் பெறும்.
அந்த வகையில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான படம் எம்டன் மகன். மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்ற டிவி சீரியல்களை இயக்கி, மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் திருமுருகன். அவரது இயக்கத்தில் வெளியான படம்தான் எம்டன் மகன். ரசிகர்களிடம் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. பரத்துக்கு இந்த படம் மிக முக்கியமான, பேர் சொல்லும் படமாகவும் இருக்கிறது.
இந்த படத்தில் கோபிகா, நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், கஜாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்ப கதை சித்திரமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தில் நாசர் அப்பாவாகவும், பரத் மகனாகவும் நடித்திருந்தனர். பரத்தின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், தாய்மாமாவாக வடிவேலு நடித்திருந்தனர், பரத்துக்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார்.
பலசரக்கு கடை வைத்திருக்கும் நாசர்தான், படத்தின் வரும் எம்டன். தன் மகனை ஒரு வேலைக்காரனை போல நடத்துவதும், அடிப்பதும், துன்புறுத்துவதும், கட்டுப்பாடுகள் விதித்து கெடுபிடி காட்டுவதும்தான் அப்பா நாசரின் கேரக்டர். அவர் சிறப்பாக, அழுத்தமாக நடிப்பார் என்று சொல்லவே வேண்டியதில்லை, நாசர் ஒரு பிறவிக் கலைஞன் என்பது ரசிகர்களே ஏற்றுக்கொண்ட உண்மை.
அதே போல் கணவன் நாசருக்கு பயந்து நடந்துக்கொள்ளும் சரண்யா, மகன் பரத், அவர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் வடிவேலு என இந்த படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது, வித்யாசகர் இசையில் பாடல்களும் ரசிக்க வைத்தன. தமிழக அரசின் சிறந்த திரைப்படம் விருதும், எம்டன் மகன் படத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நாசர் கேரக்டரில் அப்பாவாக ராஜ்கிரணும், பரத் கேரக்டரில் மகனாக நடிகர் தனுஷூம் நடிப்பதாக இருந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பிறகுதான் நாசர், பரத் அந்த கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஆனால் ராஜ்கிரண் அப்பா கேரக்டரில், நாசர் போல அவ்வளவு கெடுபிடி காட்டும் அப்பாவாக நடித்திருந்தால் அவ்வளவாக எடுபட்டிருக்காது, என்று ரசிகர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர்.





