கடந்தாண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், கேமியோ ரோலில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, டிடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. மீண்டும் ரஜினிக்கு ஒரு பாட்ஷா என்று சொல்லப்பட்டது. அண்ணாத்த படம் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படம் தந்த வெற்றி, ரஜினியை மேலும் சுறுசுறுப்பாக்கியது. அடுத்தடுத்த படங்களில் வேகமாக கமிட் ஆகி, படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. அதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். வேட்டையன் படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
இந்த படத்தில் கேமியோ ரோலில் அமிதாபச்சன் நடித்துள்ளார். மேலும் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், கிஷோர், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். என்கவுண்டர் குறித்தும், எஜூகேஷனல் மாபியா குறித்தும் வேட்டையன் படம் பேசுகிறது.
வேட்டையன் படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த பலரும், தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் தரப்பில், படம் மாஸ் ஆக உள்ளது என்கின்றனர். ஆனால் பொதுவான ரசிகர்கள் தரப்பில் இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இந்த மாதிரி படம் வந்திருந்தால் ஜெயித்திருக்காது என்று ஒரு இளம்பெண் கூறுகிறார்.வேட்டையன் படத்தில் ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், படம் ஒரு நாள் கூட ஓடாது. தியேட்டருக்குள் யாரும் வரவே மாட்டார்கள் என்று இளைஞர் ஒருவர் கூறி இருக்கிறார்.
இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரி போகிறது. படத்தில் எந்தவிதமான ஒரு எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இந்தியன் 2வுக்கு போட்டியாக வேட்டையன் என சிலர் கலாய்த்துள்ளனர். மொத்தத்தில் முதல் நாளில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள வேட்டையன் படம் வரும் நாட்களில், வசூலை அள்ளுகிறதா, ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதா, இல்லை இன்னொரு இந்தியன் 2 ஆக ஓரம் கட்டப்படுகிறதா என்பது தெரிய வரும்.





