லியோ படம் ரிலீஸ் ஆகி, திரையரங்குளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்களை பொருத்தவரை, விஜய் படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் வழக்கமான படம்தான். இதில் சிலாகித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் கதை, இயக்கம் நன்றாக இருக்கிறது. எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர் என்கின்றனர்.
விஜய் படம், தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் ஆகவில்லை. இதுகுறித்து, லியோ தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு வைத்தும், அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார். அதனால், தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் லியோ படம் அதிகாலை 4 மணிக்கு இன்று ரிலீஸ் ஆகி விட்டது.
லியோ படத்தை பொருத்தவரை, அதிக விலையில் டிக்கெட் விற்கக் கூடாது என்பதை பெரும்பாலானோர் கண்டுக்கொள்ளவே இல்லை. இதை விஜய் தரப்பிலோ, தயாரிப்பாளர் தரப்பிலோ எந்த அறிவிப்பும் வெளியிட்டு எச்சரிக்கை செய்யவில்லை. அதனால் ரூ. 1,500 முதல், 2,000 ரூபாய் வரை ரசிகர் காட்சி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஒரு டிக்கெட்டை ஒரு ரசிகர் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய தகவல் இப்போது வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செந்தில் சுந்தர் என்பவர், ரசிகர் சிறப்பு காட்சிக்கான முதல் டிக்கெட்டை ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் இருந்து டிக்கெட்டை பெற்றுள்ளார்.
இப்படி மிக மிக அதிகமான விலை கொடுத்து இந்த ரசிகர்கள் ஒரு டிக்கெட்டை வாங்க காரணம் என்னவென்றால், விஜய் மக்கள் இயக்கம் நடத்தும் இலவச கல்வி பயிலகத்துக்கு உதவும் வகையில், லியோ படத்துக்கான ஒரு டிக்கெட்டை வாங்கி இருக்கிறார் இந்த ரசிகர். கல்வி பயிலகத்துக்கு வழங்கிய ஒரு நன்கொடையாக, இப்படி ஒரு நூதன முறையில் டிக்கெட் வாங்கி இப்போது டிரண்டிங் ஆகி இருக்கிறார் இந்த விஜய் ரசிகர்.
டிக்கெட் விலை மிக அதிகம் என்றாலும், அது ஏதேனும் ஒருமுறையில் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்தது தவறு இல்லை. விஜய் நடத்தும் இலவச கல்வி பயிலகத்தை விட அவசர மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு இந்த தொகையை வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விஜய் இலவச பயிலகத்தில் படிக்காவிட்டால், வீதிகள் தோறும் அரசு பள்ளிகள் இருக்கின்றன, என்று பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.





