தமிழக முதல்வர் விஜய் தலைமையிலாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தொடர்ந்து பல அரசியல் பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தவெக கட்சியில் அதிமுகவில் இருந்து வந்து முதலில் இணைந்த பெரிய அரசியல் பிரபலம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான்.
அவரது வருகைக்கு பிறகுதான் தவெக கட்சிக்கு ஒரு அரசியல் தோற்றமே கிடைத்தது. அதுவரை ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டமாக மட்டுமே அது தெரிந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் தவெக பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இதில் மாற்று கட்சிகளில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக உள்ள சிலரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்துள்ளனர். இப்படி பல எதிர்பாராத திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தில் நடந்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று தவெக கட்சியில் இணைந்துள்ளார். அமைச்சர்கள் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் முன்னிலையில் அவர் தவெக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியை நடத்தி வந்த மன்சூர் அலிகான் கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றுப் போனவர்.
அதே போல் அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்த இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்வி உதயகுமார் சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இன்று ஆர்வி உதயகுமாரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வந்து அமைச்சர்கள் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையடுத்து நடிகை கௌதமியும் விரைவில் தவெக கட்சிக்கு வந்து விடுவார் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த அவர் சமீபத்தில் தனது பதவியை விட்டு விலகினார். அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். அதனால் நடிகை கௌதமியும் விரைவில் தவெக பக்கம் வந்து விடுவார் என்ற தகவல் பரவி வருகிறது.





