தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன். நடிகர் தனுஷின் அண்ணன். காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன், பிறகு ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக பீஸ்ட் பகாசுரன் ராயன் மார்க் ஆண்டனி என பல படங்களில் நடித்த செல்வராகவன் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் மெண்டல் மனதில் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதே போல் ரவிகிருஷ்ணா நடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் படத்தையும் எடுத்து வருகிறார். இந்த படம் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
செல்வராகவன் இயக்கிய படங்களில் 7ஜி ரெயின்போ காலனி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்த படமாகும். இந்த படத்தில் நாயகியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். பின்னாளில், செல்வராகவன் அவரை காதல் திருமணமும் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர்.
திரைப்பட இயக்குனராக நடிகராக தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனிக்கத்தக்க ஒரு கலைஞனாக பவனி வரும் செல்வராகவன், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். விஒய்ஒஎம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜயா சதீஷ் தயாரிக்கும் புதிய படத்தில் செல்வராகவன் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவனின்தம்பி நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு மனிதன் தெய்வமாகலாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பழைய பாடல் வரி பிரபலமானது. அதே வார்த்தையை சுருக்கி இந்த படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.
மனிதன் தெய்வமாகலாம் படத்தில் ஒய்ஜி மகேந்திரன் கௌசல்யா கௌசி ரவி மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இதற்கு முன்பு இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் ட்ரிப் மற்றும் தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் ஷூட்டிங் பணிகளையும் செல்வராகவன் கவனித்துக்கொள்கிறார்.





