தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டு துவங்கி 6 மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை வெளியான தமிழ் படங்களில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படமும் சரியாக போகவில்லை. மதகஜ ராஜா குடும்பஸ்தன் டிராகன் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஜெயித்திருக்கின்றன.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பிளாப் ஆனது. அதே போல் சேகர் கம்முலா இயக்கிய குபேரா படத்துக்கு தமிழில் வரவேற்பு இல்லாமல் தோல்வியை கண்டுவிட்டது. அஜீத்குமாருக்கு குட் பேட் அக்லி ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. மற்றபடி சில படங்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டன.
சமீபத்தில் வெளியான அதர்வா நடித்த டிஎன்ஏ படம் நல்ல கவனம் பெற்றுள்ளது. படை தலைவன் படம் சுமாரான படமாக தான் இருந்தது. மாமன் படம் குடும்ப படமாக அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் எதிர்பார்க்கப்பட்ட ஏஸ் படம் ஓடவில்லை. நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் தோல்வி பட்டியலில் இணைந்து விட்டது.
சிபிராஜ் நடித்த டென் ஹவர்ஸ் நல்ல விறுவிறுப்பான திரில்லர் படமாக இருந்து கவனம் பெற்றது. வடிவேலு கம்பேக் தருவார் என எதிர்பார்த்த கேங்கர்ஸ் படமும் தோல்வி கண்டது. சியான் விக்ரம் நடித்த வீரதீர சூரன் 2 படமும் சரியாக ஓடவில்லை. ஆக மொத்தத்தில் கடந்த 6 மாதங்களில் வெளியான 128 படங்களில் 10 படங்கள் கூட மாஸ் ஹிட் படங்கள் இல்லை என்பதே கசப்பான உண்மை.
இந்நிலையில் அடுத்து வெளிவர உள்ள 5 படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் இந்த படம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலிக்குமா, என்ற ரசிகர்களின் பெரிய கனவாக உள்ளது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் போன்ற படங்களை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். இதுதவிர இன்னும் சில படங்கள் வெளிவர இருக்கின்றன. வரும் 6 மாதங்களில் வர உள்ள படங்கள் வெற்றி வாகை சூடும் மாஸ் ஹிட் படங்களாக இருக்குமா, என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





