தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் டைரக்டர் ஷங்கர். இதுவரை 15 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இதில் கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்கள் மட்டுமே எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியைப் பெறவில்லை. ஆனால் மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக ஷங்கருக்கு இருந்திருக்கின்றன.
குறிப்பாக ஜெண்டில்மேன் எந்திரன் சிவாஜி இந்தியன் அந்நியன் முதல்வன் என பல படங்கள் ஷங்கரின் இயக்கிய ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர். இவரது தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் உருவானது. படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்திருந்தார். கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான கேம்சேஞ்சர் படம் படுதோல்வியை சந்தித்தது.
கேம் சேஞ்சர் படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் தில்ராஜூவின் தம்பி சிரிஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது அவர் கூறுகையில், கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரண் ஆகியோர் எங்களை தொடர்பு கொண்டு பேசவே இல்லை என்று கூறியிருந்தார். இது நடிகர் ராம்சரண் ரசிகர்களையும் அவரது அப்பா சிரஞ்சீவி ரசிகர்களையும் கோபப்படுத்தியது.
இதனால் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில், ரசிகர்கள் இது குறித்து கடுமையாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதையடுத்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை சிரிஷ் வெளியிட்டுள்ளார். அதில் தயாரிப்பாளர் சிரிஸ் அதில் கூறியிருப்பதாவது, நான் ஒரு பேட்டியில் பேசிய வார்த்தைகள் சமூக ஊடகங்கள் மூலம் தவறான புரிதலுக்கு வழிவகுத்தது.
அதனால் மெகா ரசிகர்கள் புண்பட்டதாக தெரிகிறது. கேம் சேஞ்சர் படத்துக்காக குளோபல் ஸ்டார் ராம்சரண் தனது முழு நேரத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கினார். சிரஞ்சீவி அவர்களின் குடும்பத்துடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் சிரஞ்சீவி அவர்களையோ ராம் சரண் அவர்களையோ அல்லது மெகா ஹீரோக்களின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசமாட்டோம்.
ஒருவேளை என் வார்த்தைகள் யாருடைய மன உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் இயக்குனர் ஷங்கர் குறித்து பேசியதற்கு எந்தவிதமான வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நாங்கள் பேசியது இயக்குனர் ஷங்கரை தான், உங்களை அல்ல என்றும் மறைமுகமாகவும் இதில் தயாரிப்பாளர் சிரிஷ் கூறியிருப்பதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.





