இந்தியன் 2 படம் கடந்தாண்டில் வெளியானது. கமல் நடிப்பில் அனிருத் இசையில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இந்தியன் 2 இந்தியன் 3 என 2 பாகங்களையும் இயக்கியதால்தான் இந்த குளறுபடி ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அதனால் இந்தியன் 3 படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமலும் தீர்மானித்துள்ளனர். இன்னும் 30 நாட்கள் ரீ ஷூட் நடத்தி படத்தில் சில காட்சிகளை மாற்றி எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் கமல் இந்தியன் 3 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே இந்தியன் 3 மீதி படத்தை முடிக்க ரூ. 80 கோடி வரை இயக்குனர் ஷங்கர் லைகா நிறுவனத்திடம் கேட்டதால், அவர்கள் ஷங்கர் சம்பளத்தை தர மறுத்து, இதுவரை எடுக்கப்பட்ட இந்தியன் 3 படத்தை போட்டு காட்டுமாறு கூறியுள்ளனர். அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவிக்க, அந்த பஞ்சாயத்தும் கமல் வந்த பிறகு ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த சூழலில் இன்று இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவான கேம் சேஞ்சர் படம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கடைசியாக ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ராம்சரண் நடித்திருந்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து இன்று வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் காணப்பட்டது. இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறரா். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தெலுங்கில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.
இன்று காலை வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கு நல்ல விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களில் திருட்டு இணையதளங்களில் இந்த படம் எச்டி பிரிண்டில் வெளியாகி உள்ளது. அதனால் பலரும் இந்த படத்தை இலவசமாக டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர். இதனால் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர்.





