எப்போதுமே ஒரு திரைப்படம் என்பது தியேட்டர்களில் திரைக்கு முன்பு அமர்ந்திருக்கும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்க வேண்டும் அல்லது கைதட்டி விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்த செய்ய வேண்டும். அல்லது மனதை குவித்து ரசித்து அந்த காட்சியில் லயித்துப் போய் அசைவின்றி அமர்ந்திருக்க வேண்டும். அத்தகைய படங்கள்தான் எப்போதும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்த படைப்புகளாக ஜெயிக்கும்.
ஆனால் இன்றைய பெரும்பாலான படங்கள், படம் ஆரம்பித்த சில மணித்துளிகளில் ரசிகர்களை நெளிய வைத்து விடுகின்றன. அடக்க முடியாத கொட்டாவிகளை அடுத்தடுத்து வெளியிடச் செய்கின்றன. ஆள விடுங்கடா சாமி என இடைவேளையுடன் எழுந்து வெளியே தெறித்து ஓடவும் செய்து விடுகின்றன. அப்படிப்பட்ட படங்களால் இனி தியேட்டர் பக்கமே தப்பித் தவறிக்கூட போய்விடக் கூடாது என்ற உறுதிக்கு ரசிகர்களை தள்ளிவிடுகின்றன.
நல்ல படங்கள் என்பது மக்களை ரிலாக்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். நிஜ வாழ்க்கை தரும் பொருளாதார நெருக்கடிகளும் வாழ்வியல் சிரமங்களும் உறவுகளின் சிக்கல்களும் கடந்த கால துயரங்களும் துன்பங்களும் பல மனிதர்களை தியேட்டர்களை தேடி வரச் செய்கின்றன. இரண்டரை மணி நேரமாவது எதையும் நினைக்காமல் நேரத்தை நிம்மதியாக போக்குவோம் என்று வருபவர்களுக்கு அதுவே மிகப்பெரிய கொடுமையாக மாறிவிடுவதுதான் கசப்பான உண்மை.
அதே நேரத்தில் காந்தாரா போன்ற படங்களை பார்க்கும்போது மனிதர்களுக்குள் ஏதாவது ஒரு உத்வேகமும் நம்பிக்கையும் கிடைக்க செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படம் பெரிய வெற்றியை பெறக் காரணம் அந்த படத்தின் இறுதி காட்சியில் கொடூரமான வில்லனை அழிக்க கடவுளே மனித வடிவில் வந்து வதம் செய்வதுதான்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் நேற்று 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. காந்தாரா படத்துக்கு முந்தைய கதையாக இந்த படத்தின் கதைக்களம் உருவாகி உள்ளது. ஜெயராம் ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு நேற்று முதல் நல்ல வரவேற்பும் பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் முதல் நாளில் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு ரூ. 65 கோடி முதல் ரூ. 75 கோடி வரை வசூல் கிடைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இன்னும் வசூல் குறித்து அறிவிக்கவில்லை. அதே வேளையில் 2ம் நாளில் இன்று இந்த படம் நிச்சயமாக ரூ. 100 கோடியை கடந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. படம் பார்த்த பலரும் இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை ஒரே வாரத்தில் கடந்துவிடும் என்றும் கூறியிருக்கின்றனர்.





