கன்னட நடிகர் ரிஷப்ஷெட்டி இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஓர் இடத்தில் சுற்றியபடி காணாமல் போகும். அந்த இடத்திலிருந்து காந்தாரா சாப்டர் 1 கதை துவங்குகிறது.
இந்த படத்தில், ஏன் நம் முன்னோர்கள் இந்த இடத்திலேயே மறைகிறார்கள் என்கிற கேள்விக்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் காந்தாரா மலைப்பகுதியில் ஈஸ்வர பூந்தோட்டம் என்கிற இடத்தில் ஒரு பழங்குடியின சமூகம் வாழ்கிறது. அப்பகுதியில் இருக்கும் மகத்துவத்தை அறிந்த பாந்தோரா மன்னன் ஈஸ்வர பூந்தோட்டத்திற்கு படையுடன் சென்று அதை கைப்பற்ற நினைக்கிறான்.
ஆனால் தெய்வ சக்தி மன்னனின் ஆசைகளையும் அவனையும் அழிக்கிறது. மன்னனின் மகன் மட்டும் அங்கிருந்து தப்பி செல்கிறார். மீண்டும் ஈஸ்வர பூந்தோட்டத்தின் மீது மன்னர் குடும்பத்திற்கு ஆசை எழுகிறது. அவர்கள் அமானுஷ்யங்கள் நிறைந்த காந்தாரா காட்டுக்குள் சென்றார்களா? ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைந்தார்களா என்கிற கதைக்களத்தில் புராண நம்பிக்கைகளை மையப்படுத்தி கதை சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.
நம்முடைய புராண கதைகளுக்கு என்று நீண்டகாலமாக தொடர்ந்து வரும் செவிவழி கதைகள் உள்ளன. அதன் ஆழம் செல்லச் செல்ல ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் பண்பாடுகளுடன் கூடிய மத நம்பிக்கைகள், வழிபாட்டு நெறிகள், நெருப்பின் மீதான அச்சம் என காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதைக்களம் மிகவும் கவனமாக எழுதப்பட்டுள்ளது.
பழங்குடிகளின் வாழ்க்கையை மேம்போக்காக முன்வைக்காமல் ரிசப் ஷெட்டி தொன்மை மிகுந்த கதையை நவீன சினிமா மொழிக்கு அசாதாரணமாக கடத்தி ஜெயித்திருக்கிறார். காந்தாரா படத்தில் நில உரிமை குறித்து பேசிய அவர் இந்த படத்தில் நிலத்தின் ஆன்மா யாரிடம் இருந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார். பூமியில் அநியாயம் நடக்கும்போதெல்லாம் தெய்வம் மனித உருவெடுக்கும் என்கிற கதையை சொல்லி இருக்கிறார். அதில் தெய்வத்தையும் வீழ்த்தும் தருணங்களும் எழுதப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த படத்தில் நடிப்பிலும் இயக்கத்திலும் ரிஷப் ஷெட்டி மிகப்பெரிய பாய்ச்சலை கொடுத்திருக்கிறார். காந்தாரா படத்துக்காக தேசிய விருது வாங்கிய அவர் இந்த படத்திற்காகவும் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மொத்தத்தில் காந்தாரா பெரிய அளவில் ரசிகர்களில் மனம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக மேக்கிங் ரீதியாக இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லாக காந்தாரா சாப்டர் 1 படம் இருக்கும் என்றும் பாராட்டி விமர்சனங்கள் வந்துள்ளன.





