சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு குத் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி பஞ்ச் டயலாக் பேசி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பாலா. தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள் சினிமா விழாக்கள் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கேபிஒய் பாலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற வகையில் தனக்கு வந்த வருமானத்தில் பெரும்பகுதியை மக்களுக்கு உதவுவதற்காக கேபிஒய் பாலா செலவிட்டார். சத்தியமங்கலம் மலைகிராம மக்கள் பயன்பாட்டுக்காக 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி இலவசமாக வழங்கினார்.
மேலும் இலவசமாக விவசாய உபகரணங்கள் வழங்குதல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி மருத்துவ உதவி கல்வி உதவி என பலவிதமான உதவிகளை கேபிஒய் பாலா தொடர்ந்து செய்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி சமூக சேவையாளராக பெரிய அளவில் கேபிஒய் பாலா மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கேபிஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமான படம் காந்தி கண்ணாடி. ரணம் அறம் தவறேல் படத்தை டைரக்ட் செய்த ஷெரீப் இயக்கத்தில் உருவான படம் இது. இந்த படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது.
கடந்த 5ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி அனுஷ்கா நடித்த காதி ஆகிய படங்களுடன் நடிகர் கேபிஒய் பாலா நடித்த காந்தி கண்ணாடி படமும் வெளியானது. இதில் மதராஸி படம் இதுவரை 90 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இன்னும் சில தினங்களில் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான காதி படம், மொத்தமே 7.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே போல் கேபிஒய் பாலா நாயகனாக நடித்த காந்தி கண்ணாடி படமும் இதுவரை மொத்தம் ரூ. 2 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் இருந்தும் படம் பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் வந்து வரவேற்பு தரவில்லை. வசூலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.





