நடிகர் சத்யராஜ், கொங்கு தமிழில் பேசும் கோயம்புத்தூர்காரர் என்பதுதான் இவரது முதல் அடையாளம். கடவுள் மறுப்பாளரான இவர், நடிப்புக்காக சினிமாவில் கடவுள் பக்தராக நடிப்பார். அதே வேளையில், யதார்த்தமான மனிதர். வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக நடித்து, இப்போது அழகான ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில், சத்யராஜ் நடித்த படங்களில் அவர்கள் நடித்த கேரக்டர்கள் பேசப்படுபவையாக இருந்திருக்கின்றன. கட்டப்பாவாக, பாகுபலி படத்தில், சத்யராஜ் ஒரு சிறந்த நடிப்பை வழங்கி இருந்தார். லவ்டுடே படத்தில், இவானா அப்பாவாக, பிரதீப் ரங்கநாதனை மிரட்டி இருப்பார்.
துவக்கத்தில் ரஜினி, கமல் படங்களில் சத்யராஜ் தான் பிரதான வில்லனாக இருந்தார். அவரை, பாலைவன ரோஜாக்கள் படம் மூலம் ஹீரோவாக மாற்றினார் மணிவண்ணன். பிறகு பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் படம் மிகப்பெரிய ஹீரோவாக அடையாளம் காட்டியது.
நடிகர் சத்யராஜ், சமீபமாக திமுக நடத்தும் நிகழ்ச்சிகளில், பொதுமேடைகளில் ஏறி பேசி வருகிறார். சமீபத்தில் ஆட்டோ டிரைவர்கள் கலந்துக்கொண்ட விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றார். அதில் கலந்துக்கொண்டு நடிகர் சத்யராஜ் பேசினார்.
இப்போது எல்லா ஊர்களிலும் ஆட்டோக்கள் அதிகளவில் இருக்கின்றன. ஆனால், 40, 50 ஆண்டுகளுக்கு கோயம்புத்தூரில்தான் அதிகமாக ஆட்டோக்கள் ஓடியது. ஓரளவு வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். எங்கள் வீட்டில் கார் எல்லாம் இருந்தது. கார் ஓட்ட எனக்கு ஆசையாக இருந்தது. ஆனால், 18 வயதுக்கு பிறகுதான் கார் ஓட்ட முடியும் என கூறிவிட்டனர்.
எனக்கு இன்ஜின் வைத்த வண்டி ஒன்றை ஓட்ட வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். என் நண்பன் ராஜகோபால் என்பவரது அப்பா, ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார். ராஜகோபாலிடம் சொல்லி, அவரது அப்பாவை சந்தித்து, இந்த விஷயத்தை சொன்னேன். அவர் எனக்கு ஆட்டோ ஓட்ட சொல்லிக் கொடுத்தார். எனக்கு 13 வயதிலேயே ஆட்டோ ஓட்டத் தெரியும், என்று கூறி இருக்கிறார் சத்யராஜ்.





