தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் தனது திறமையாலும் கடும் உழைப்பாலும் வெகு சீக்கிரமாக தமிழ் சினிமாவில் முன்னணி இடத்துக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்றால் அது மிகையல்ல. தனது வளர்ச்சிப் பாதையை சிறப்பாக திட்டமிட்டு தனது கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் நல்ல முறையில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக இளம்பெண்கள், குடும்பத்தினருடன் வந்து பார்க்கும் நல்ல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால், இனி அவரது இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பார் என்று தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நடிகர் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் மிக மிக அதிகம். அதே போல் சிவகார்த்திகேயனுக்கும் குடும்பமாக படம் பார்க்க வரும் ரசிகர் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
இப்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிங்க நடை என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நடிகர்கள் விஜயகாந்த், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு திருப்புமுனை படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் என்பதால், அவரது இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வமாக சம்மதித்தார்.
இந்நிலையில் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் நடிக்கும் இந்தி படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அந்த படத்துக்கு சிகந்தர் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.
சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி படம், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படம், அதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ஆனால் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலை சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது தற்போதைய நிலவரப்படி சிக்கந்தர் படத்தை முடித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





