கௌதம் மேனன் தற்போது இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தில் தான் அவர் தனது நடிப்புக்கான பாதையை முழு வீச்சில் தொடங்கினார் என்று கூறலாம். அதில் போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டைப் பெற்றார்.
அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் கதாநாயகியுடன் காதல் செய்யும் ஒரு சீன் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. தொடர்ந்து நடிப்பிலும் இயக்கத்திலும் ஈடுபட்டு வருகிறார். நடுவே சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார்.
அடுத்ததாக அவர் மம்முட்டியை வைத்து டொமினிக் தி லேடீஸ் பர்ஸ் படத்தை எடுத்திருக்கிறார். நேரடி மலையாள திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் துப்புரவாளராக மம்முட்டி நடித்திருக்கிறார். நகரில் காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் ஓரளவு நன்றாக இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் புதிய படத்தை இயக்க இருக்கிறார் கௌதம் மேனன். இதில் கதாநாயகனாக ரவி மோகன் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இருப்பினும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம், எப்போதுதான் வெளியாகும் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்குக் கூட அண்மையில் பதில் அளித்த கௌதம், மதகஜராஜா கொடுத்த வெற்றியால் இந்தக் கோடையில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து இருப்பார். அப்போது தனுசை வைத்து அவர் எடுத்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை, நான் இயக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அவர், நான் நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் நான் திருப்தி அடையவில்லை. தனுசும் வடசென்னை படத்தில் நடிக்க சென்று விட்டார். இதனால் ஒரு கட்டத்தில் வெறும் நான்கு ஐந்து நாட்கள் மட்டும் தான் கால் சீட் கிடைத்தது. பல்வேறு சவால்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் படத்தை நானே தயாரித்ததால் ஒரு கனத்த இதயத்துடன் அப்படி கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.





