தமிழ் சினிமாவே தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது குட் பேட் அக்லி. அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன். படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியில் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதில் அஜித்திற்கு ஜோடியாக ரம்யா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் திரிஷா. பிரசன்னா அர்ஜுன்தாஸ் பிரபு யோகிபாபு உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். மார்க் ஆண்டனியை தொடர்ந்து இதிலும் தெலுங்கு நடிகர் சுனில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து அண்மையில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க அஜித்தை மையப்படுத்தியே அதன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. சொல்லப்போனால் விண்டேஜ் அஜித்தை இதில் பார்க்க முடிவதாக பலரும் தெரிவித்து இருந்தார்கள். அதற்கு ஏற்றது போலவே அஜித்தின் பழைய படங்களில் உள்ள சிக்னேச்சரை காட்டி இருந்தார் ஆதிக்.
குறிப்பாக பில்லா அமர்க்களம் ரெட் வாலி போன்ற திரைப்படங்களின் அஜித்தின் கேரக்டர்களை குறிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மூன்று காலங்களில் நடப்பது போன்று இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதில் பல்வேறு தோற்றங்களில் அஜித் வருவதால் படம் அவரது ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக அமையும் என்று கூறுகிறார்கள்.
வெறும் ஆக்சன் படமாக மட்டும் இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் கதை எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை இதில் காட்டி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். படத்தில் அஜித்திற்கு மகனாக கார்த்திகேயா தேவ் என்பவர் நடித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே சலார் திரைப்படத்தில் வந்திருந்தார். படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், இரண்டாவது பாடலும் நாளை வெளியிடப்படுகிறது. GOD BLESS U மாமே எனத் தொடங்கும் இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. வரும் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





