விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அஜீத்குமாருக்கு படுதோல்வியை தந்த நிலையில், குட் பேட் அக்லி படம் மாஸ் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் 3 விதமான கெட்அப்களில் நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. விதவிதமான கெட்அப்களில் மாஸ் என்ட்ரி தந்த நடிகர் அஜீத்குமாரை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். குறிப்பாக பில்லா பட கெட்டப்பில் அஜீத்குமாரின் தோற்றம் வேற லெவலில் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜீத்குமாருடன் திரிஷா பிரபு பிரசன்னா சுனில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். டீசர் வெளியான நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின் படி இம்மாத இறுதியில் அதாவது மார்ச் மாத 25ம் தேதிக்கு பிறகு ஏதேனும் ஒரு நாளில் குட் பேட் அக்லி டிரெய்லரை வெளியிட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் திட்டமிட்டுள்ளனர். அதே போல் இம்மாத இறுதியில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் துவங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ள நிலையில், ஏகே ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி தரும் செய்தியும் கசிந்துள்ளது. குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதற்கு முந்தைய அதாவது ஏப்ரல் 9ம் தேதி, முக்கிய தலைநகரங்களில் குட் பேட் அக்லி பிரிமியர் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனால் ஒரு நாள் முன்னதாக ஏகே ரசிகர்கள் 9ம் தேதியே குட்பேட் அக்லி படத்தை கண்டு ரசிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





