நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கிய இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்த 5 மாதங்களாக சென்சார் பிரச்னை காரணமாக இந்த படம் முடங்கி போயுள்ளது. இதற்கிடையே இந்த படம் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
ஜனநாயகன் படம் இனிமேல் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிற நிலையில் இந்த படம் பெருத்த நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு தந்துள்ளது. இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ஜனநாயகன் படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் வெங்கட் நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமன உத்தரவை தமிழக அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய ஒரு முக்கிய பதவியில் தமிழர் இல்லாத கன்னடர் வெங்கட் நாராயணாவை நியமித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் வெங்கட் நாராயணா கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சிவக்குமாரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி அவரது பதவிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அன்றே வெளியிடாமல் நேற்று வெளியிட்டதுக்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அதுவும் சினிமா தயாரிப்பாளரை இப்படிப்பட்ட பொறுப்பான முக்கியமான ஒரு பதவியில் நியமிப்பதா என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தை ஒரு பைசா தொட மாட்டேன் என்று கூறிவரும் முதல்வர் விஜய், இப்படி தனக்கு நெருக்கமானவர்களை நண்பர்களை அரசு பதவியில் அமர்த்தி அவர்களுக்கு மாதந்தோறும் மக்கள் வரிப்பணத்தை லட்சக்கணக்கில் சம்பளமாக வழங்குவது மட்டும் நியாயமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே தனது ஜோதிடரை அரசு பதவியில் நியமித்து பிறகு விமர்சனம் காரணமாக அவரை முதல்வர் விஜய் நீக்கியது குறிப்பிடத்தக்கது.





