நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல ஆண்டுகளாக ஆன்மீகவாதியாக அமைதியானவராக மிகவும் விழிப்புணர்வுமிக்கவராக மாறி இருக்கிறார். அடிக்கடி இமயமலை செல்கிறார். ஆன்மிக தலங்களுக்கு சென்று மன அமைதி தேடுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரது உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து மறுபிறவி எடுத்து வந்தார்.
அதைத் தொடர்ந்து உடல் நலத்தை பாதிக்கும் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் போன்றவற்றை முற்றிலுமாக விட்டு விலகிய ரஜினிகாந்த் இப்போது உடல் நலம் ஆரோக்கியம் என மிகவும் கவனமாக இருந்து வருகிறார். 75 வயதிலும் சுறுசுறுப்பாக இளைஞர் போல் காணப்படுகிறார். தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
ஆனால் ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயங்கர முன் கோபக்காரராக தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவராக இருந்தவர். குறிப்பாக அவர் மனதில் ஒரு விஷயம் தவறாக பட்டால் யாராக இருந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் துணிச்சலாக பேசும் ஒரு பழக்கமும் அப்போது நடிகர் ரஜினிகாந்துக்கு இருந்தது.
அப்படி ஒரு சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது. இதற்காக கடந்த 1995ம் ஆண்டில் சென்னையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மற்றும் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அந்த விழாவுக்கு மிகவும் தாமதமாக முதல்வர் ஜெயலலிதா வருகை தந்தார். இது விழாக்குழுவினரை எரிச்சலடைய செய்தது. குறிப்பாக அங்கிருந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் அந்த மேடையில் நன்றி கூறி பேச வந்த நடிகர் ரஜினிகாந்த் முதலில் முதல்வர் ஜெயலலிதா பிறகு சிவாஜி கணேசன் என பலரையும் பாராட்டி பேசினார். அதன் பின்னர் திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விரலை சொடுக்கி கோபமாக பேசினார். நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன். நீங்க பிலிம் சிட்டி திறந்து வைத்த போது சிவாஜியை கவுரவிச்சிருக்கணும். நீங்க அதை செய்யலே. அவரை மதிக்கலே. அந்த விழா மேடையில் அவரை உட்கார வைத்து கவுரவம் பண்ணியிருக்கணும்.
அதை செய்யாதது தப்பு. தப்பு பண்றது மனித இயல்பு. தப்பை திருத்திக்கிறது மனித தன்மை. அப்போ பண்ணின தப்புக்கு இப்போ பிரம்மாண்ட விழா எடுத்து சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணினாலும் தப்புன்னு தான் சொல்லுவேன். அது ஒரு குடிமகனோடு உரிமை. அதுவும் ஒரு நடிகன் என்கிற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு என பேசியிருக்கிறார். நேற்று இயக்குனர் பாக்யராஜூக்கு நடந்த பாராட்டு விழாவில், கடந்த 1995ல் ஜெயலலிதா குறித்து ரஜினி பேசிய போது தனக்கு ஏற்பட்ட பரபரப்பான சம்பவங்களை பற்றி அவர் நினைவு கூர்ந்தார். அதனால் அப்போது நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





