சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு திரைப்படங்கள் கொடுத்த வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் ஹெச் வினோத். இதனைத் தொடர்ந்து அஜித்குமாரை அவர் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. முந்தைய இரண்டு திரைப்படங்களிலும் அவரது ஸ்கிரிப்ட் வேற லெவலில் இருந்ததால், நிச்சயம் இந்த திரைப்படம் புது விதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அதை எல்லாம் சுக்குநூறாக்கும் வகையில் அஜித் – வினோத் படத்தின் அறிவிப்பு இருந்தது. பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தை இந்த கூட்டணி ரீமேக் செய்வதாக அறிவிக்கப்பட்டது. முந்தைய இரண்டு திரைப்படங்களிலும் கடுமையாக தனது திரைக்கதை திறமையை வெளிக்காட்டி இருந்த வினோத் ஏன் இப்படி ரீமேக் படத்தை எடுக்க வேண்டும் என்று அப்போதே ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதும், அவருக்காகவே அந்த ரீமேக் படத்தை இயக்க இருந்ததும் தெரிய வந்தது. நேர்கொண்ட பார்வையாக வெளியான அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து வினோத் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தை எடுத்தது. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம், சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் சூப்பரான வசூலை அள்ளியது. இந்த நிலையில் அஜித்திடமிருந்து வெளியே வந்த வினோத் அடுத்ததாக, கமல் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்த திரைப்படம் கமலின் கதையான தலைவன் இருக்கிறான் படத்தின் கதை எனக் கூறப்பட்டது. இதற்கு, வினோத் திரைக்கதை எழுத இருப்பதாகவும் தகவல் வெளியானது. கமலின் 233 வது திரைப்படமாக இது உருவாகும் எனக் கூறப்பட்ட நிலையில், அது அறிவிப்போடு நிற்கிறது. இதை அடுத்து, தீரன் அதிகாரம் இரண்டு படத்தை அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கு கார்த்தி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், வினோத் இதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வினோத் இன்னொரு திட்டத்தையும் வைத்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொலிட்டிக்கல் காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது. இப்படியாக இந்த மூன்று திரைப்படங்களில் அவர் எதை முதலில் இயக்குகிறார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





