தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் எச் வினோத். சதுரங்க வேட்டை நேர்கொண்ட பார்வை தீரன் அதிகாரம் 1 வலிமை துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் அடுத்ததாக நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை இயக்கினார். சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
ஜனநாயகன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படம் தயாரிப்பது தள்ளி போய்விட்டது.
நடிகர் தனுஷூக்கும் அடுத்தடுத்த லைன் அப் இருப்பதால் எச் வினோத் இயக்கத்தில் தனுஷ் இப்போதைக்கு நடிக்கப் போவதில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதற்கிடையே இயக்குனர் எச் வினோத் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தெலுங்கு மலையாளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க நடிகர் சூர்யா கமிட் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச் வினோத் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
வழக்கமாக சூர்யா படங்கள் என்றாலே ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும். அந்த அளவுக்கு பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த பல படங்கள் தொடர் தோல்வி படங்களாக இருந்து விட்டன. ரெட்ரோ படமும் கூட வணிக ரீதியாக வெற்றி என்றாலும் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெறவில்லை.
இந்த சூழலில் அவர் நடிக்க கருப்பு படமும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போயுள்ளது. மேலும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையே மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இப்போது எச் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





