சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் ஹரிஷ் கல்யாண். மாமனார் மருமகள் உறவு முறையை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர், பெரிய பிம்பம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு என ஹரிஷ் கல்யாண் நடித்த அத்தனை திரைப்படங்களும் தோல்வியடைந்தன. இந்த சமயத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் ஹரிஷ் கல்யாண்.
அவருக்கென தனி ரசிகர் கூட்டம் அந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்தது. இதன் மூலம் பட வாய்ப்புகள் வர அதனை சரியான முறையில் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார் ஹரிஷ் கல்யாண். இதில் 2018 ஆம் ஆண்டு, அவரது நடிப்பில் பியார் பிரேமா காதல் படம் வெளியானது. தற்போது ஸ்டார் படத்தை இயக்கியிருக்கும் இளன்தான் அதன் இயக்குனர்.
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதால் அதன் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனை கிட்டத்தட்ட பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த திரைப்படம் அமைந்தது. இளைஞர்களின் அபிமான திரைப்படமாக அது உருவாக, அதனைத் தொடர்ந்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் அவர் நடித்தார்.
இதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட லெட்ஸ் கெட் மெரிட் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது பார்க்கிங் திரைப்படம். வயதான நபருக்கும், இளைஞருக்கும் இடையேயான ஈகோவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படத்தின் ரீமேக் தற்போது ஐந்து மொழிகளில் உரிமம் பிடித்திருக்கிறது. நான்கு மொழிகள் மற்றும் சர்வதேச அளவில் ஒரு மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





