நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இப்போது இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் அவரை சினிமாவில் அறிமுகம் செய்து ஒரு நடிகராக களத்தில் இறக்கி விட்டது அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்தான். அவர் 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை தந்தவர்.
எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்ற படம் 1992ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில்தான் நடிகர் விஜய் நாயகனாக அறிமுகமானார். அடுத்து அவரை விஜயகாந்துக்கு தம்பியாக நடிக்க வைத்து செந்தூரப்பாண்டி படம் மேலும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியதும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்தான். அதன்பிறகுதான் விஜய் சினிமாவில் வளர ஆரம்பித்து இப்போது உச்ச நடிகராக இருக்கிறார்.
நடிகர் விஜய் குறித்து அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சின்ன பையனாக இருந்த போது பெரும்பாலும் விஜய் எங்களுடன் படுத்து தூங்கிய நாட்கள் ரொம்பவும் கம்மி. அவருக்குன்னு ஒரு ரூம் இருக்கும். ஆனால் அங்கு படுக்க மாட்டார். அவர் என் அம்மாவுடன்தான் இரவில் படுத்து தூங்குவார்.
ஆச்சி ஆச்சின்னு எப்பவும் என் அம்மாவுடன் தான் படுத்து தூங்குவார். விஜய்க்கு ஒரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்தி விட்டார் என் அம்மா. ரெண்டு பேரும் ஒரே கட்டிலில்தான் படுத்து தூங்குவாங்க. அப்போ தலையணைக்கு அடியில் உள்ளங்கை சைஸ்ல ஒரு பைபிள் இருக்கும்.
நைட்டில் படுத்த பிறகு தூங்கப் போவதற்கு முன்பு அந்த பைபிளில் ஒரு வாசகத்தை படித்துவிட்டு தான் தூங்கணும். அதே மாதிரி காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையா தலையணைக்கு அடியில் இருக்கிற பைபிளை எடுத்து ஒரு வாசகத்தை படித்துவிட்டுதான் வெளியே போகணும். அப்படி ஒரு பழக்கத்தை விஜய்க்கு என் அம்மா ஏற்படுத்தி விட்டார்.
அதனால் ஸ்கூலில் விஜய் படிக்கும் வகுப்பு ஆசிரியை என்னிடம் விஜய் குறித்து அவன் ஒரு டிவைன் பாய் என்று பெருமையாக சொல்வார். அந்த மிஸ், விஜய் பத்தி சொல்லும் போது, விஜய் பேசும்போது கூட காதுல வந்து மெதுவா தான் பேசுவான் என்பார். அதுக்கு எல்லாம் எங்க அம்மாவோட பிரேயர்தான் காரணம். நாங்க நல்லா இருக்க, விஜய் நல்லா இருக்க, இப்படி உச்சத்துல இருக்க உழைப்பை மீறிய ஒரு பவர் உதவி பண்ணுது என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





