சில கலைஞர்கள் உடலால் மறைந்தாலும் ரசிகர்கள் உள்ளத்தில் எப்போதும் அவர்களது நினைவுகளில் நிலைத்து வாழ்கின்றனர். இசை உலகில் தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி அவர் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
மேலும் ஆறு முறை தேசிய விருது பெற்றவர். ஏகப்பட்ட முறை மாநில விருதுகள் என அவர் வாங்கி குவித்திருக்கிறார். விருதுகளால் தன்னை பெருமைப்படுத்தி கொள்ளாமல் விருதுகளுக்கே பெருமை சேர்த்த ஒரு மாபெரும் இசைக்கலைஞர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் திடீரென மறைந்தார்.
அவரது கலை சேவையை பாராட்டி திருவுருவ சிலை அமைத்தல், சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. எஸ்பிபியின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கோணேட்டம் பேட்டை கிராமத்தில் நான்கடி உயரம் கொண்ட மார்பளவு சிலை எஸ்பிபிக்கு அமைக்கப்பட்டது. பின்பு ஐதராபாத்தில் அரசுக்கு சொந்தமான ரவீந்திர பாரதி என்ற கலாச்சார மையத்தில் எஸ்பிபி யின் முழு திருவுருவச் சிலை திறக்கப்பட்டது.
இதற்கிடையே அவர் கடைசியாக வாழ்ந்த சென்னை காம்தார் நகருக்கு செல்லும் சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் ஐதராபாத்தை தொடர்ந்து கேரளம் மாநிலத்தில் பாடகர் எஸ்பிபியை கௌரவப்படுத்தும் விதமாக அவரது சிலை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டத்திரிப்பாடு நினைவகத்தில் மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான சமம் மற்றும் ஸ்வரலயா கலை அமைப்பின் கூட்டு முயற்சியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரமுள்ள இந்த திருவுருவச் சிலையை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாடகர் ஹரிகரன் பாடகி சித்ரா மற்றும் சுஜாதா மோகன் உன்னி மேனன் மனோ விஜய் ஜேசுதாஸ் ஸ்ரீநிவாஸ் மது பாலகிருஷ்ணன் ஜோஸ்னா பிஜூ நாராயணன் சித்தாரா கிருஷ்ணகுமார் ஸ்டீபன் தேவஸ்ஸி என பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. சிலை திறப்பு விழாவில் சமம் அமைப்பு சார்பில் சங்கீத மேகம் என்னும் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர். எஸ்பிபி சிலை அமைந்திருக்கும் பகுதியை இசை பூங்காவாக மேம்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.





