விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து நாள்தோறும் பல விவாதங்கள் நடைபெற்றுகொண்டு வருகின்றன. நேற்று முன்தினம் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. விஜய்யை குறித்து வெளிவரும் ஒவ்வொரு செய்திகளும் அவர் மிக விரைவில் அரசியல் கட்சி தொடங்க தயாராகி வருவதாகவே தெரிய வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, விஜய்க்கும் அவரது தந்தையான எஸ்.ஏ.சிக்கும் சில கருத்து முரண்பாடுகள் இருப்பதாக சமீப நாட்களாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. எஸ்.ஏ.சியே ஒரு மேடையில் பேசும்போது, “ஒவ்வொரு வீட்டிலும் மகனுக்கும் தந்தைக்கு வழக்கமாக எப்படி பிரச்சனை வருமோ அது போல்தான் எனக்கும் விஜய்க்குமான பிரச்சனை” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கும் சில மனஸ்தாபங்கள் இருப்பது வெளிப்படையாகவே தெரியவருகிறது.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான கோடங்கி, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “விஜய் கூட்டணி இல்லாமல் அரசியலுக்குள் வந்தால் அவர் செல்லாக்காசாகத்தான் ஆகிப்போவார். திராவிட கட்சியோடோ அல்லது தேசிய கட்சியோடோ இணைந்தால்தான் அரசியலில் அவரால் நீடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “விஜய்யை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவருக்கும் அவரது தந்தைக்கும் உள்ள பிரச்சனை, அது தவிர அவரை பற்றி பல பல விஷயங்கள் தொடர்ந்து பொது வெளியில் பேசப்பட்டு வருகிறது. விஜய் இந்த விஷயங்களை பொய் என்று ஒரு முறை கூட கூறியது இல்லை. சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு பொது வாழ்க்கைக்கு வந்து எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.





