தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சார்பட்டா பரம்பரை நான் கடவுள் அவன் இவன் அரண்மனை 3 பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பணத்தகராறு காரணமாக நடிகர் ஆர்யா இப்போது சட்டசிக்கலில் சிக்கியுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஆர்யா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தினர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சினிமா வட்டாரத்திலும் ஆர்யா ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிம் நகரைச் சேர்ந்த தாஹிர் சினே டெக்னிக் என்ற சினிமா உபகரண உபகரணங்கள் வழங்கும் நிறுவனம் அளித்த புகாரைத் தொடர்ந்து ஐதராபாத் போலீஸ் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா உள்ளிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம் குழுவினரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி திரைக்கு வந்த படம் அனந்தன் காடு. தமிழ் மலையாளத்தில் உருவான இந்த படத்திற்காக ஆர்யாவின் குழுவினர் உயர்தர டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் பிரத்தியேக விளக்கு உபகரணங்களை தாஹிர் சினே டெக்னிக் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த உபகரணங்கள் அவர்களின் சொந்தச் செலவில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு படக்குழுவினர் அனந்தன் காடு படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகும் படக்குழுவினர், அந்த நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிய வருகிறது. இன்னும் 1.80 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள் அனந்தன் காடு படக்குழுவினர் தரப்பில் இருந்து அச்சுறுத்தல்களும் எதிர்ப்புகளும் வந்ததை அடுத்து இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு சென்று விட்டது.
நடிகர் ஆர்யா, அனந்தன்காடு படத்தின் தயாரிப்பாளர் வினோத் மற்றும் கிஷோர் என்ற உதவியாளர் ஆகிய மூவரும் தங்களை மிரட்டியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத் காவல்துறையினர் நடிகர் ஆர்யா உள்ளிட்ட மூவர் மீதும் ஏமாற்றுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அனந்தன் காடு படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





