தமிழ் சினிமாவில் இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1976ம் ஆண்டில் வெளியான அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இந்தப் படத்தில் நாயகனாக சிவக்குமார் நாயகியாக சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குனர் தேவராஜ் மோகன் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.
இந்த படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பஞ்சு அருணாசலம். அன்னக்கிளி படம் வெளியாகி நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதேபோல் இளையராஜாவுக்கு இது 50வது ஆண்டு கால இசை பயணமாகும். இதையடுத்து இசைஞானி இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இளையராஜா கூறியதாவது, உங்களுக்கு தான் 50 ஆண்டுகள். எனக்கு ஆண்டுகளே கிடையாது. இப்போது பால்கியின் தமிழ் படத்திற்கு இசைப்பனி நடந்து வருகிறது. வருடங்கள் தான் போய்க்கொண்டு இருக்கிறதே தவிர நான் அப்படியே அங்கேயே தான் இருக்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ இப்போதும் அப்படியே தான் இருக்கிறேன்.
அதைத்தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை இசை கடவுளாக பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு போகட்டும். நான் இசையமைக்கும் போது எந்த நினைவும் இருக்காது. மன அமைதியை கொண்டு வருவதே இசை. அதை நான் செய்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். நான் இல்லாவிட்டாலும் என் இசை மூலம் அந்த கொண்டாட்டம் என்றென்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஜிகே வெங்கடேஷ் எம்எஸ் விஸ்வநாதன் சலீம் சவுத்ரி உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களிடம் நான் இசை வாத்தியங்கள் வாசித்திருக்கிறேன். 200 250 படங்களுக்கு மேல் உதவி இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தாலும் நான் தனியாக முதலில் இசையமைத்த போது எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. தனியாக ஒரு காட்டில் விட்டது போல் மனநிலை இருந்தது.
பல நாட்கள் பயிற்சிக்குப் பிறகு அன்னக்கிளி பாடல்கள் வந்தது. யாரிடமும் நான் எதுவும் கேட்கவில்லை. ஒவ்வொரு சூழலையும் நான் புரிந்துக்கொண்டு ஆத்மார்த்தமாக இசையைத் தருகிறேன். இப்படித்தான் ஒவ்வொரு பாடல்களையும் நான் தருகிறேன். அதனால்தான் அந்த இசை இன்றும் உயிரோடு இருக்கிறது. அது உங்களது ஆத்மாவாக மாறிவிட்டது என்று இளையராஜா கூறியிருக்கிறார்.





