கடந்த 1976ம் ஆண்டில் வெளியான படம் அன்னக்கிளி. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தயாரித்த இந்த படத்தில் தான் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு இசையுலகில் சரித்திரம் படைத்தார். ஆனால் தன்னை முதன்முறையாக சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்துக்கே பாடல் தர மறுத்தவர்தான் இசைஞானி. இதை அவரே சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசைஞானி இளையராஜா கூறியதாவது, நாடோடித் தென்றல் படத்தில் போட்ட பாட்டுக்கள் எல்லாமே நான் கதை சொல்லி போட்டது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் முதலில் கதையே இல்லாமல், பிறகு நான் போட்ட பாடல்களுக்கு ஏற்ப கதை உருவாக்கப்பட்டது.
காக்கிச்சட்டை படத்துக்கு கம்போசிங் செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஆஎம் வீரப்பனுடன் முதுமலை காட்டுக்கு சென்றிருந்தோம். மூன்று நாட்கள் கம்போஸ் செய்யலாம் என்று அங்கு சென்றோம். காலையில் கம்போசிங்கில் இருந்தோம். மதிய உணவு இடைவேளைக்கு முன்பே அனைத்து பாடல்களும் முடிந்து விட்டது.
மறுபடியும் மாலை 5 மணிக்கு அமர்ந்து கம்போசிங் செய்ய ஆரம்பித்தோம். டியூன்கள் வந்து கொண்டே இருந்தது. ஆறு பாடல்கள் அப்போதே முடித்து விட்டோம். இயக்குனர் ராஜசேகரிடம் ஆறு பாடல்களையும் ஒரே படத்தில் வைப்பதாக இருந்தால் இதனை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொன்னேன். எல்லாம் டியூன்களும் அருமையாக இருக்கிறது. அப்படியே வைத்துவிடுகிறேன் என்று அவர் கூறினார்.
தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் என்ன செய்வார் என்றால் அவருக்கு கம்போசிங் நேரம் நான் ஒதுக்காமல் இருந்தால் கூட கம்போசிங் செய்து வந்த டேப் எல்லாம் அனுப்பி வைக்கச் சொல்வார். அப்படி கொடுத்த போது நான் போட்ட ஆறு பாடல்களில் ஒரு பாடலை குறிப்பிட்டு எனக்கு ரெக்கார்ட் பண்ணி கொடு, சூட்டிங் ஆட்கள் எல்லாம் காத்திருக்கிறார்கள். அதை ரெக்கார்ட் செய்து கொடு என்றார்.
நான், அந்த ஆறு பாடல்களை அப்படியே ஒரு படத்தில் பயன்படுத்தினால் கொடுக்கிறேன். இல்லை என்றால் தர மாட்டேன் என்றேன். எனக்கே இப்படி சொல்றியே என்று கேட்டார். இல்லை, அது அப்படிதான். ஆறு பாடல்களும் ஒரே படத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் தருகிறேன் என்று கறாராக சொல்லிவிட்டேன். அதன் பிறகு ஆறு பாடல்களை வைத்து கதை அமைத்த படம் தான் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் என்று இசைஞானி இளையராஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





