இசையமைப்பாளர் இளையராஜா இப்போது, தனது பாடல்களை பயன்படுத்தும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அவரது பாடல்களை செல்போனில் ரிங் டோனாக வைத்தால் கூட நோட்டீஸ் அனுப்புவாரோ என்று ரசிகர்கள் அச்சப்படும் அளவுக்கு அவரது செயல் தீவிரமடைந்து வருகிறது.
சமீபத்தில் இளையராஜா, மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில், குணா படத்தில் தனது இசையில் வெளியான கண்மணி அன்போடு பாடலை பயன்படுத்தியதற்காக, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு, குணா படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனிடம் உரிய அனுமதி பெற்று, அதற்கான தொகையும் அவருக்கு செலுத்தி விட்டோம் என்று பதில் தந்திருந்தனர்.
ஆனால் இப்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குணா படத்தின் பாடலுக்கு இளையராஜா ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறாரே, அதே நேரத்தில் குணா படத்தில் இவர் வேறோரு இசையமைப்பாளரின் பாடலை 2 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தி இருக்கிறாரே என்ற கேள்வி எழுந்து, அந்த விவகாரம் இப்போது வைரலாகி வருகிறது.
அதாவது குணா படத்தில், சலூன் கடையில் கமல் முகச்சவரம் செய்வார். சலூன் கடைக்காரர் சிவாஜி, அவருக்கு சவரம் செய்து விடுவார். அப்போது பின்னணியில் ரேடியோவில் ஒரு பாட்டு வரும். உல்லாசமாகவே உலகத்தில் வாழவே கல்யாணம் ஆஹா கல்யாணம் என்ற பாடல் மறைந்த காமெடி நடிர் மற்றும் பாடகர் ஜேபி சந்திரபாபு குரலில் ஒலிக்கும். கடந்த 1954ல் வெளிவந்த பெண் என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றது.
இந்த பாடல் காட்சி 2 நிமிடங்களுக்கு மேல் குணா படத்தில் தொடர்ந்து வரும். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் ஆர் சுதர்சனம். பாடலை எழுதிய கவிஞர் உடுமலை நாராயண கவி. பெண் படத்தை தயாரித்தது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஆனால் இந்த பாடலை உரிமை கொண்டாட பாடகர் சந்திரபாபு, படத்தின் தயாரிப்பாளர் ஏவி மெய்யப்ப செட்டியார், கவிஞர் உடுமலை நாராயண கவி, இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம் என யாருமே , குணா படம் வெளியான 1991ம் ஆண்டில் உயிரோடு இல்லை. அனைவருமே மறைந்து விட்டனர்.
எனவே, ராயல்டி கேட்டு யாரும் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில், இந்த பாடலை மிக தைரியமாக குணா படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். தன்னுடைய பட பாடலை மற்றவர்கள் வியாபார ரீதியாக பயன்படுத்த கூடாது என கூப்பாடு போடும் இளையராஜா, அடுத்தவர் இசையில் வெளிவந்த பாடலை, குணா படத்தில் வியாபார ரீதியாக இவர் மட்டும் பயன்படுத்தலாமா, அப்படி என்றால் இவருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





