ஜெண்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 மட்டும்தான். இதில் நாயக் என்ற இந்தி படமும் கேம் சேஞ்சர் என தெலுங்கு படமும் அடங்கும். மொத்தம் 13 படங்கள் மட்டுமே நேரடி தமிழ் படங்களாக அவரது இயக்கத்தில் வெளியாகி உள்ளன.
இதில் கடைசியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமல் நடித்த இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. அதே போல் தெலுங்கில் வெளியான ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த 2 படங்களும் இயக்குனர் ஷங்கரின் இமேஜை படுமோசமாக டேமேஜ் ஆக்கி விட்டன.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் ஷங்கர். அவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரும் உண்டு. ஆனால் இப்போது 2 தோல்வி படங்களை அடுத்தடுத்து தந்து விட்டார்.
நன்றி மறந்த சினிமா உலகத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றால்தான் ஒருவரது பெயரும் புகழும் நிலைத்து நிற்கும். வெற்றி இல்லை என்றால் கண்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடுவார்கள். பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குனர் ஷங்கர் மட்டும் இதில் விதிவிலக்கு அல்ல.
இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களுக்கு பிறகு இப்போது அவர் கைவசம் இருப்பது இந்தியன் 3 படம்தான். நிச்சயமாக இந்த படத்தை அவர் மிகப்பெரிய வெற்றிப் படமாக தந்தாக வேண்டும். அப்படி தந்தால்தான் அவரால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். ஏனென்றால் அவரது அடுத்த படம் வேள்பாரி படத்தை 3 பாகங்களை மிக பிரமாண்டமாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
வேள்பாரி படத்தின் மொத்த பட்ஜெட் 1000 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இரண்டு பிளாப் படங்களை தந்த இயக்குனர் ஷங்கரை நம்பி தயாரிப்பாளர் யாரும் 1000 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் இந்தியன் 3 படம் பெரிய வெற்றி பெற்றால் இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. ஒருவேளை இந்த படமும் சொதப்பினால் வேள்பாரி படம் இயக்கும் இயக்குனர் ஷங்கரின் ஆசை கனவாகவே போய்விடும் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





