பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக ஆடுகளம் விசாரணை வடசென்னை அசுரன் என ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதுகளையும் பெற்றார்.
தொடர்ந்து விடுதலை திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களையும் இயக்கி இருந்தார் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை மையப்படுத்தியே இதன் கதையை அவர் எடுத்திருந்தார். இதில் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இப்படியான சூழலில் தான் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை எடுக்க களமிறங்கி விட்டார் வெற்றிமாறன். ஏற்கனவே இதற்கான அறிவிப்பு அசுரன் படத்துக்கு பிறகு வெளியானது. அப்போது வெற்றிமாறனுடன் சூர்யா இணைந்து ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளில் நடித்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட் போடப்பட்டு இதற்கான டெஸ்ட் சூட்டிங் நடத்தப்பட்டது.
ஆனால் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டானதால் சூர்யா அந்த வேலைகளில் கவனம் செலுத்த, வெற்றிமாறனும் விடுதலை படத்தை எடுக்கச் சென்று விட்டார். ஆனால் தொடர்ந்து வெளிநாடுகளில் இதற்கான ஜி எப் எக்ஸ் பணிகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தை இயக்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
அதேசமயம் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர், வெற்றிமாறன் உடன்தான் இணைவார் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் திடீரென வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்து இருக்கிறார். இதனால் இந்த படத்தின் பணிகள் முடிந்த பிறகு அவர், வாடி வாசலில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இப்படி இருக்க வாடிவாசல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார் வெற்றிமாறன். அதில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பாக முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் பொருந்தி போனால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அதற்காக நான் அதற்கு பொறுப்பேற்க முடியாது. ஒரு படத்தை எடுக்கும்போது என்னால் முடிந்த வரை நூறு சதவீத பங்கை நிச்சயமா அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.





