இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்து வருகிறார் கமல். இதைத்தொடர்ந்து. எச். வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் கமல் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டில், மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் கமல் நடிப்பது உறுதியாகி உள்ளது.
கமல் பிறந்த நாளை முன்னிட்டு, கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் டீசர் கமல் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக நவம்பர் 6ம் தேதியே டீசர் வெளியாகும் என, அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கூறி இருக்கிறார்.
கடந்த 1987ம் ஆண்டில், அதாவது 36 ஆண்டுகளுக்கு முன்பு கமல் – மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் நாயகன். அதற்கு பின், இப்போது மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில், முதன்முறையாக நயன்தாரா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும், அவருக்கு சம்பளம் ரூ. 12 கோடி என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. முதலில் திரிஷா நடிப்பதாக இருந்த நிலையில். நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது.
இப்போது இந்த படத்தில், திரிஷா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் திரிஷா ஏற்கனவே திட்டமிட்டபடி அவருக்கான ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆக, திரிஷா மற்றும் நயன்தாரா இருவருமே நடிப்பது உறுதி என்கிறது படக்குழு வட்டாரம்.
இப்போது இதில் அப்டேட் தகவலாக, விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி கேரக்டரில் நடித்த அபிராமி,மணிரத்னம் இயக்கத்தில் இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. ஆனால், இவர் நயன்தாராவுக்கு பதிலாக அவரது கேரக்டரில் அபிராமி நடிக்கிறாரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. படத்தில் 3 நாயகிகளா அல்லது நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதால், அபிராமி நடிக்கிறாரா என்ற சந்தேகமும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





