நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், மாஸ்டர் ரித்விக், யோகி பாபு, விநாயகம், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பீஸ்ட் தந்த சறுக்கலுக்குப் பின் இப்படத்தில் நேர்த்தியாக டார்க் காமெடியை கையாண்ட நெல்சன், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இப்படத்தில் ரஜினியின் கெட்அப், ஸ்டைல் எல்லாம் வின்டேஜ் ரஜினியை பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் ரஜினிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜாஃபர் படப்பிடிப்பில் ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஷூட்டிங்கில் காருக்குள் அமர்ந்திருந்தபோது, ஸ்டண்ட் நடிகரிடம் நீங்கள் யாருடைய ரசிகர் என ரஜினி கேட்டார். அதற்கு அந்த நடிகர் ஜாக்கிச்சான் என சொல்லி தப்பிக்க பார்த்தார். இருந்தும் விடாத ரஜினி, தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் என தொடர்ந்து கேட்டதற்கு, அந்த நடிகர் நீங்கள்தான் என கூறினார்.
அடுத்து என்னிடம் அந்த கேள்வியை கேட்கக் கூடாது என்று மனதுக்குள் நினைத்தவாறு நான் திரும்பி அமர்ந்திருந்தேன். அப்போது என் தோளில் தட்டி, அதே கேள்வியை ரஜினிகாந்த் கேட்டார். நானும் உங்கள் ரசிகர்தான் என்று சாதரணமாக கூற விரும்பவில்லை. அதனால் சிறு வயதில் படையப்பா போன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து உங்கள் ரசிகர் என்றேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்துடன் இருந்தது சிறந்த அனுபவம். அவர் சிகரெட் பிடிப்பது, கண்ணாடி போடுவது செம ஸ்டைலாக இருக்கும். ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, ஏதோ ஒரு தைரியத்தில் அவரது கண்ணாடியை தருவீங்களா என கேட்டுவிட்டேன். அப்போது அது புரெக்டக்சன் கண்ணாடி என கூறிய ரஜினி, இறுதி நாளில் மறக்காமல் என்னை அழைத்து அந்த கண்ணாடியை தருவார்கள் என்றார். இது எனக்கு மறக்க முடியாத அனுபவம் என ஜாஃபர் கூறினார்.





