கூலி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு மார்ச் 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
சென்னையில் வுட்லேன்ட் தியேட்டர் மற்றும் வளசரவாக்கம் ஆவின் பூத் பகுதி மைதானத்தில் பெரிய செட் அமைத்து நடத்தப்பட்டது. இதில் முதல்கட்டமாக ரஜினிகாந்த் 15 நாட்கள் கால்ஷீட் தந்து நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக தான் ஜெயிலர் 2 படம் உருவாகிறது. முதல் பாகத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் ரஜினி அவரை கொன்று விடுவார். அதனால் ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக யார் வருவார்கள் என்பதில் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் ஜெயிலர் படங்களை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அவரது படங்களில் தொடர்ந்து நடிகர்கள் யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி விடிவி கணேஷ் நடித்து வருவதால் ஜெயிலர் 2 படத்திலும் அவர்கள் நடிக்க வாய்ப்புள்ளது. ஜெயிலர் படத்துக்கு இசையமைத்த அனிருத் ஜெயிலர் 2 படத்துக்கும் இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு இப்போது 74 வயதாகிறது. எனினும் ஓயாமல் பிஸியாக படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும் அவரது சுறுசுறுப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், அவரது உடல் நலம் ஆரோக்கியத்தில் படக்குழு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சென்னையில் முக்கியமான 2 இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக கேரளா மாநிலம் பாலக்காடு மாவடத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வருகிற 10ம் தேதி முதல் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக அங்கு பெரிய ஷெட் அமைக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் கொளுத்துகிற நிலையில் ரஜினியின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு இயக்குனர் நெல்சன், கேரளாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை ஷெட்யூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





