“ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இத்திரைப்படம் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. இன்னும் பல கோடிகள் வசூல் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

“ஜெயிலர்” திரைப்படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. “பாட்ஷா”, “படையப்பா” போன்ற திரைப்படங்களில் எப்படி ஒரு மாஸ் இருந்ததோ அதே அளவுக்கான மாஸ் “ஜெயிலர்” படத்திலும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் நெல்சனின் வழக்கமான பிளாக் காமெடிகள், “ஜெயிலர்” திரைப்படத்திலும் சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருந்தது. ஒவ்வொரு காட்சிகளிலும் அனிருத்தின் பின்னணி இசை அந்த காட்சியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது.
இதனிடையே “ஜெயிலர்” திரைப்படத்தின் Showcase வெளியானபோது ஒரு காட்சியில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் நிற்கும் ஒரு புகைப்படம் இடம்பெற்றதாகவும் ஆதலால் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் எனவும் பலர் கூறி வந்தனர். ஆனால் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்பது படம் வெளியான பின் தெரிய வந்தது.

எனினும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டரான கிரண், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
படத்தில் ரஜினிகாந்தும் அவரது மகனாக நடித்த வசந்த் ரவியும் இணைந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் தேவைப்பட்டதாம். ஆனால் அந்த தருணத்தில் அதனை எடுக்கமுடியவில்லையாம். அதன் பின் சிவகார்த்திகேயனின் உடலமைப்பும் வசந்த் ரவியின் உடலமைப்பும் ஒன்று போல் இருப்பது தெரியவந்து, ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் நிற்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கி, அதில் சிவகார்த்திகேயனின் தலைக்கு பதிலாக வசந்த் ரவியின் தலையை வைத்து எடிட் செய்தார்களாம். இப்படித்தான் அந்த புகைப்படம் உருவானதாக கிரண் கூறியுள்ளார்.





