ரஜினிகாந்த் நடித்த 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இவற்றில் 2.0 படம் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயை தாண்டிவிட்டது என்று கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக படம் பின்னடைவையே சந்தித்தது. அதேபோல்தான் தர்பார், அண்ணாத்த படங்களும். இதன் காரணமாக அவருக்கு கட்டாய வெற்றி ஒன்று தேவைப்படுவது என ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படமானது கடந்த பத்தாம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பக்கா ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. குறிப்பாக ரஜினியை படத்தில் பார்க்கும்போது விண்டேஜ் ரஜினி ஞாபகம் வந்ததாகவும் இதுபோன்று அவரை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும் ரசிகர்கள் சிலாகித்தனர். மேலும் நெல்சன் திலீப்குமாரின் மேக்கிங்கிற்கும் ரசிகர்கள் தங்களது அப்ளாஸை கொடுத்தனர்.
படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த சூழலில் ஜெயிலரானது 375 கோடி ரூபாயை வசூலில் தாண்டிவிட்டதாக கூறப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக வந்துகொண்டிருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் அடுத்தக்கட்ட வசூல் நிலவரம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
அதேசமயம் உத்தரப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை அடுத்து விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கான வசூல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டது என்று திரைத்துறை வட்டாரத்தினர் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை ரஜினிகாந்த்தின் ஜெயிலர் இன்னும் வசூல் வேட்டைதான் நடத்திக் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது நடக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படமானது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளங்களில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே ஜெயிலர் தரிசனத்தை பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர். அன்றைய தினம்தான் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படமும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.





