நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2 ஆண்டுகளாகிறது. நாளை 3ம் ஆண்டு கட்சி துவக்க விழா சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக ஒருமுறை கூட நடிகர் விஜய் பிரஸ்மீட் நடத்தவில்லை. தமிழ் செய்தியாளர்களை ஊடகங்களை நேரில் சந்தித்து பேசவில்லை. ஆனால் நேற்று ஆங்கில செய்தி ஊடகத்தை சந்தித்து நேர்காணல் தந்திருக்கிறார். அதுவும் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, இதுவரை உலகில் எந்தத் தலைவரும் செய்யாத ஒரு வீரச்செயலை, ஒரு புதுமையைச் செய்திருக்கிறார் தவெக தலைவர் நடிகர் விஜய். இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியை வீட்டுக்கு அழைத்து, ஒரு நேர்காணல்.
ஆம், நேர்காணல் in literal sense. இவரைக் கண்டுவிட்டுச் சென்றுவிட்டனர். எதற்கு இந்த சந்திப்பு, என்ன கேட்டார்கள், என்ன சொன்னார் என்பதை யாரும் காணவும், கேட்கவும் முடியாது. நாங்கள் பல விஷயம் பேசினோம், அவர் நிதானமாக பதிலளித்தார் என்று ராஹுல் கன்வால் தொலைக்காட்சியில் சொன்னார். ஆனால் என்னவென்று யாருக்கும் தெரியாது.
இப்படி ஒரு பேட்டியைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? என்ன காரணாமக இருக்கலாம்? தனக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தியாவுக்கே தெரிந்து விடக்கூடாதென நினைத்திருக்கலாம். இங்கிலிஷ் நேர்காணல் என்பதால் அது தயக்கத்தைக் கொடுத்திருக்கலாம். இவர் வழி தனி வழி.
துக்கவீட்டில் இருப்பவரைச் சென்று காணாமல் தன் வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிப்பார். செய்தித்தொலைக்காட்சியை வீட்டுக்கழைத்து நேர்காணல் கொடுப்பார், அதைப் பதிவுசெய்யக்கூடாதென்று நிபந்தனையுடன். திடீரென உறக்கத்திலிருந்து விழித்து பரப்புரை செய்ய கிளம்புவார். சில இளம் அறிவாளிகள்தான் மாற்றம் வேண்டுமென்று ஏதோ சொல்கிறார்களே. இதுதான் அந்த மாற்றமா..? என்று கிண்டலாக தன் பதிவை செய்திருக்கிறார்.





