தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பதே இப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 10 நாட்களுக்கு மேலாகியும் சென்சார் போர்டு சான்று தராத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் படத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று நடந்த 2ம் நாள் விசாரணையில் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் குறியீடுகளும் நிறைய இருப்பதால் 4 வாரங்கள் வரை படத்தை தணிக்கை செய்து சான்று வழங்க கால அவகாசம் தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு படத்தை உடனே தணிக்கை செய்து தர வேண்டும் என்று படக்குழு தரப்பில் சென்சார் போர்டை கட்டாயப்படுத்த கூடாது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் குறியீடுகள் இருந்தால் அதை ஆய்வுக்குழு பார்வையிட்ட பிறகுதான் சான்றிதழ் தர முடியும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தணிக்கை வாரியம் சொல்லப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் சரியான ஆவணங்களை சமர்பிக்குமாறு கூறிய நீதிபதி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நாளை அளிப்பதாக தெரிவித்து வழக்கை நாளை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். நாளை மறுதினம் 9ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய அறிவித்த நிலையில் நாளை தான் இறுதி தீர்ப்பே வெளியாக உள்ளது.
ஆனால் ஜனநாயகன் படத்தை பொருத்த வரை தவெக தலைவர் விஜய் நடித்த ஒரு திரைப்படமாக இது இருப்பதால் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரும் வாய்ப்பு குறைவுதான் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த படம் நிச்சயமாக மறு ஆய்வுக்குழுவின் பார்வைக்கு பிறகுதான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். அதனால் ரிலீஸ் 4 வாரங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12ம் தேதி டெல்லியில் நடக்கும் சிபிஐ விசாரணைக்கும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்சார் போர்டு நிச்சயமாக ஜனநாயகன் படத்துக்கு இப்போதைக்கு சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அதனால் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ் கண்டிப்பாக இருக்காது என்றே தகவல் பரவி வருகிறது.





