நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். பிரியா மணி மமிதா பைஜூ பிரகாஷ்ராஜ் பாபி தியோல் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இது நடிகர் விஜய் நடிக்கும் 69வது படம் என்ற நிலையில், சினிமாவை விட்டு முற்றிலும் விலகி அரசியலில் முழு கவனம் செலுத்த நடிகர் விஜய் தயாராகிவிட்டார். இதற்கிடையே நடிகர் விஜயின் 51வது பிறந்த தினமான நேற்று ஜனநாயகன் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் ஒன்று வெளியானது. படக்குழு தரப்பில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இந்த கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
இதில் போலீஸ் கெட்டப்பில் கெத்தாக நடந்து வரும் நடிகர் விஜய், கையில் இருக்கும் ரத்தம் தோய்ந்த சிறுவாளால் தன் மீசையை சீவி விடுவது போன்ற காட்சியுடன் அந்த கிளிம்ப்ஸ் வெளியாகி இருந்தது. இந்த கிளிம்ப்ஸூக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 24 மணி நேரத்தில் இணையத்தில் பெரிய சாதனையை படைத்திருக்கிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களில் இருந்து வரும் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் கிளிம்ப்ஸ் டீசர் ட்ரெய்லர் போன்றவை அடுத்த 24 மணி நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைக்கும்.
அதேபோல் இப்போது ஜனநாயகன்படத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வெளியான கிளிம்ப்ஸ் அடுத்த 24 மணி நேரத்தில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது 22ம் தேதி இரவு 12 மணி முதல் 23ம் தேதி நேற்றிரவு 12 மணி வரை 24 மணி நேரத்தில் மொத்தம் 32.4 மில்லியன் பார்வையாளர்களை ஜனநாயகன் கிளிம்ப்ஸ் கடந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. 3 கோடிக்கு மேல் பார்வையாளர்கள் வந்தாலே அது மிகப்பெரிய சாதனை என்று சொல்லப்படும் நிலையில், 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வையாளர்களை ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் கடந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்பதால் இதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.





