தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் இருக்கிறார். தனது 69வது படத்தில் நடிக்க ரூ. 275 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரது மகன் ஜேசன் சஞ்சய், தனது அப்பா விஜய் போல் நடிகராக விரும்பாமல், தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக விரும்புகிறார். இதற்காக வெளிநாடுகளில் டைரக்சன் சார்ந்த படிப்புகளை முடித்துள்ள ஜேசன் சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார்.
தற்போது லைகா புரொடக்சன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் 10 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்காக ஸ்கிரிப் ரைட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இந்த படத்தில் நடித்த ஹீரோக்கள் தேர்விலும் பல மாதங்களாக கவனம் செலுத்தி வந்தார்.
நடிகர்கள் துருவ் விக்ரம், கவின், விஜய் சேதுபதி, சூர்யா, அதர்வா, ஹரீஷ் கல்யாண் என பலரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், யாரும் இவரது இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை. ஏனென்றால் இவர் அறிமுக இயக்குனராக இயக்கும் முதல் படமே இதுதான் என்பதால் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை.
இந்நிலையில் தெலுங்கு பட நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ராயன் படத்தில், தனுஷின் தம்பியாக நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றவர் சந்தீப் கிஷன். அவர் இந்த படத்தில் நடிப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பதற்கான எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்காமல் லைகா நிறுவனம் தாமதம் செய்து வருகிறது. ஏற்கனவே லைகா நிறுவனம் லால் சலாம், இந்தியன் 2 தந்த பலத்த நஷ்டத்தால் ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வேட்டையன் படம் ரிலீஸானால் மட்டுமே லைகாவின் இந்த சிக்கலான பொருளாதார நிலை சற்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த படம் தயாரிப்பில் ஆர்வமின்றி அலட்சியமாக உள்ளது.
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ஹீரோவாக நடிக்க வேண்டிய சந்தீப் கிஷனிடம் இதுகுறித்து பேசி அவரது சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்தால் மட்டுமே இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதியாகும். ஆனால் லைக்கா நிறுவனம் எந்தவித ஆர்வமும் காட்டாமல் அமைதி காப்பதால், அந்த நிறுவனத்திடம் வசமாக ஜேசன் சஞ்சய் சிக்கி கொண்டதாக தெரிய வருகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இந்த படம் எடுக்கப்படுமா, அப்படியே கிடப்பில் போடப்படுமா என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.





