தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், தற்போது திரைத்துறையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட காய்களை நகர்த்தி வருகிறார். இதில் அவரது கடைசி திரைப்படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. ஹெச் வினோத் இதனை இயக்கி வருகிறார். அண்மையில் கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இப்படி விஜய் ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா என தற்போது பிஸியாக இருக்க, அவரது மகன் ஜேசன் சஞ்சயும் சினிமாவுக்குள் வந்து விட்டார். ஆரம்பத்திலேயே தனது மகனை சினிமாவுக்கு கொண்டு வர விஜய் திட்டமிட்டார் என்று தான் கூற வேண்டும். இது வேட்டைக்காரன் திரைப்படத்திலேயே நடந்தது.
அதில் இடம்பெற்ற நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு, விஜயுடன் சேர்ந்து அவரது மகனும் நடனமாடி இருப்பார். இதன் பிறகு சஞ்சய், திரையில் முகம் காட்டவே இல்லை. இருப்பினும் அது சார்ந்த கல்வியையே அவர் பயின்று வந்தார். லண்டனில் இயக்கத்திற்கான படிப்பை அவர் பயின்று முடித்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படத்தையும் அவர் இயக்கி இருந்தார்.
ஆனால் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நிச்சயமாக ஹீரோவாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் இயக்குனராகப் போவதாக அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவித்தது. இதற்கான அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த தகவலை அறிந்த பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். விஜயின் மகன் இயக்குனராகப் போகிறாரா என்ற கேள்வியும் இணையத்தில் வைரலானது. இது ஒரு புறம் இருக்க, சஞ்சயின் திரைப்படம் குறித்த அடுத்த கட்ட தகவல் வெளியாகாமலேயே இருந்தது. சொல்லப்போனால் அவரது திரைப்படத்திற்கு ஹீரோ யார் என்ற கேள்வி நெடுங்காலம் தொடர்ந்து வந்தது. முதலில் கவின் பெயர் அடிபட்டது. பிறகு துருவ் விக்ரம் நடிப்பதாகவும் சொன்னார்கள். இப்படியான சூழலில் தான் இறுதியாக சந்தீப் கிஷனுடன் உடன் கை கொடுத்தார் சஞ்சய்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமன் இதற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சந்தீப் கிஷன் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் மேக்கிங் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், பரபரப்பாக வேலை செய்யும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதைப் பார்த்த தளபதி ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.





