சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் “மாவீரன்”. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். அதிதி ஷங்கர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின் இதில் வில்லனாக வருகிறார். மேலும் சரிதா, மோனிஷா போன்ற பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

“மாவீரன்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் தற்போது புரோமோஷன் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலேசியா நாட்டில் புரோமோஷன் செய்வதற்காக படக்குழுவினர் போன பொழுது மிகப் பெரிய சொதப்பல் நடந்துவிட்டதாம்.
பொதுவாக வெளிநாடுகளில் ஒரு திரைப்படத்தின் புரொமோஷன் நடப்பதாக இருந்தால் அந்த நாட்டில் அத்திரைப்படத்தை வெளியிடும் நிறுவனம்தான் அந்த புரொமோஷனுக்கான வேலைகளை தயார் படுத்துவார்களாம். ஆனால் “மாவீரன்” படக்குழுவினர் மலேசியா நாட்டில் உள்ள ரசிகர் மன்றத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டார்களாம். அதே போல் சென்னையில் உள்ள ஒரு தனியார் Event Management நிறுவனத்திடமும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்களாம்.

படக்குழுவினர் மலேசியா விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவர்களை பிக்கப் செய்வதற்கு வாகனமே வரவில்லையாம். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் சாதாரணமான ஒரு ஹோட்டல் அறையை ஒதுக்கியிருந்தார்களாம்.
மேலும் மலேசிய சட்டப்படி, ஒரு படத்தின் புரொமோஷனுக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு தனி விசா ஏற்பாடு செய்துவிட்டு போக வேண்டும். ஆனால் சிவகார்த்திகேயனோ விசிட் விசாவில் சென்றாராம். விசிட் விசாவில் வருபவர்கள் மலேசியாவில் பொது மேடைகளில் மைக் பிடித்து பேசக்கூடாதாம். இப்படி சட்டத்தை மீறி ஒரு புரொமோஷன் நடப்பதை அறிந்துகொண்ட அரசு அதிகாரிகள் பலரும் புரொமோஷனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்துவிட்டார்களாம்.

“இந்த விழா நடந்தால் உங்களை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என்று அதிகாரிகள் கூறினார்களாம். அதன் பின் அந்த விழா கேன்சல் செய்யப்பட்டதாம். இதனை தொடர்ந்து மலேசியாவில் “மாவீரன்” திரைப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தரிடம் யோசனை கேட்டார்களாம். அவரோ “பத்திரிக்கையாளர் சந்திப்பு மட்டும் நடத்திவிடலாம்” என்று கூறினாராம். அதன் பின் அவரது யோசனைக்கு இணங்க பத்திரிக்கையாளர் சந்திப்பு மட்டும் நடத்திவிட்டு வந்தார்களாம். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





