தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான தி கோட் படத்தை தொடர்ந்து விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பாபி தியோல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 2025ம் ஆண்டில் தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆகிறது.
தளபதி 69 படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் முழுநேரமும் ஈடுபட இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று, முதல்வர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகும் அதே நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய், விஜயின் கலைவாரிசாக சினிமாவில் காலடி பதிக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடனமாடிய சிறுவன் ஜேசன் சஞ்சய், இன்று வாலிபராக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு புதிய படத்தை ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்கிறார். ராயன் படத்தில் தனுஷூக்கு தம்பியாக நடித்த நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
நடிகர் விஜய் 1984ம் ஆண்டில் வெளிவந்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் மற்றும் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் அவருக்கு ரூ. 500 சம்பளமாக வழங்கினார். தளபதி 69 படத்தில் விஜய் ரூ. 250 கோடி சம்பளம் பெறுகிறார். அதே போல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தை இயக்க ரூ. 10 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.





