மௌனம் பேசியதே திரைப்படத்தில் அமீருக்கு உதவி இயக்குனராக இருந்து செயல்பட்டவர் எம் ராஜேஷ். அங்கிருந்து விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர உடன் உதவியாளராக இருந்த ராஜேஷ், சுக்ரன் மற்றும் நெஞ்சிருக்கும் வரை ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்தார். இதனை அடுத்து தனது இன்னிங்சிற்காக காத்திருந்த அவர், சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்த புளித்த கதையாக அது இருந்தாலும், அதை கையாண்ட பாராட்டைப் பெற்றார் எம் ராஜேஷ். ஜீவா மற்றும் சந்தானத்தின் நடிப்பு, காட்சிக்கு காட்சி போடப்பட்ட கவுன்டர் காமெடிகள், ஜீவாவிற்கும் அனுயாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் என ஒவ்வொன்றும் தரமாக இருந்ததால் சிவா மனசுல சக்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதன் பிறகு அவர் எடுத்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆர்யா, சந்தானம், நயன்தாரா என அனைவரும் தங்கள் பங்கிற்கு காட்சிகளை பிரமாதப்படுத்த, இறுதியில் ஜீவாவும் வந்து அசத்தினார். முதல் இரண்டு திரைப்படங்கள் மூலம் ராஜேஷ் ஊரறியும் இயக்குனராக மாறினார். காமெடியுடன் கலந்து அவர் அடித்த ஒவ்வொரு லூட்டியும், திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இதன் பிறகு மூன்றாவது முறையாக, சந்தானம் காமெடியை நம்பி உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து களத்தில் இறங்கினார் ராஜேஷ். ஒரு கல் ஒரு கண்ணாடியாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, வசூல் சாதனை படைத்தது. ஒரே மாதிரியான கதையை கொடுத்தாலும், அதில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ததால் ராஜேஷ் பிரபலமானார்.
ஆனால் இதன் பிறகு அவருக்கு தொடர்வது சோதனை காலம் என்று தான் கூற வேண்டும். ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்ள என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் படு தோல்வி சந்தித்தன. இயக்குனர் ராஜேஷிற்கு என்னதான் ஆச்சு என்று சினிமா விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர். இப்படியான சூழலில் தான் ஜெயம் ரவியை வைத்து பிரதர் எனும் திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் நடிகர் ஜெயம் ரவி, ராஜேஷின் கடந்த பயணத்தைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், ராஜேஷின் ஆரம்ப காலங்களில் வெளியான திரைப்படங்கள் குடும்ப பாங்கான திரைப்படங்களாக இருக்கும். அதில் காமெடி சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பிற்பாதியில் அவர் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அதனால் தவறுதலாக அமைந்துவிட்டது. ஆனால் பிரதர் திரைப்படம் காமெடி கலந்த குடும்ப என்டர்டைனராக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.





