விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அடுத்த திரைப்படமாக இந்தியன் 2 உருவாகி இருக்கிறது. சங்கர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில், தனது அடுத்த திரைப்படத்திலும் கமல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக அவர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் திரைப்படத்தில் பணியாற்றினர். இப்போது வரை பேசப்படும் அந்த திரைப்படத்தில் வேலு நாயக்கர் ஆகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன்.
அந்த திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இப்படியா சூழலில் மீண்டும் இந்த காம்போ இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில் அண்மையில், அந்தப் படம் குறித்தான அறிவிப்பு வீடியோ வெளியானது.
அதில் நீண்ட முடியுடன், வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் இருந்தார். தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், காயல்பட்டினம் காரன் என்ற விவரத்தையும் வெளியிட்டார். சண்டைக் காட்சிகள் தூக்கலாக இருந்த அந்த வீடியோவின் கடைசியில், படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் நாசர் மற்றும் அபிராமி ஆகியோருக்கும் மணிரத்னம் முக்கியமான கதாபாத்திரத்தை வைத்திருப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் கால்ஷீட் காரணமாக துல்கர் சல்மான் படத்திலிருந்து வெளியேறினார்.
அவருக்கு பதில் சிம்புவின் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என தெரிகிறது. இப்படியான சூழலில் ஜெயம் ரவியும் தக் லைப் திரைப்படத்திலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





