சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். தனது அனுபவமிக்க நடிப்பை அப்படியே வெளிகாட்டிய ஜெயம் ரவி, அந்த திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார்.
இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் என்ற படம் வெளியானது. பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இதனை எடுத்திருந்தார். பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்திருந்த இந்த திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. ஏன் பலருக்கும் இந்த திரைப்படம் வெளியானது கூட தெரியாது என்று கூறலாம்.
இருப்பினும் ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் உள்ளது. சைரன், ஜீனி, பிரதர், தனி ஒருவன் பார்ட் 2, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம், கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய வேடம் என அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்தை, வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது எடுத்துள்ளார். தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா இதிலும் நடித்திருக்கிறார். படத்துக்கு படம் வித்தியாசத்தை காட்டும் அகமது, இந்த முறை சைக்கோ திரில்லர் கதையை கையில் எடுத்திருக்கிறார். இதில் முக்கிய வில்லனாக விஸ்வரூபம் படத்தில் நடித்த ராகுல் மிரட்டி இருக்கிறார்.
இதுபோக சார்லி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இறைவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.
படத்தில் ஹீரோ வில்லனுக்கான மோதல் எடுத்துக் கொள்ள சிறிது நேரம் ஆவதாகவும், ஆங்காங்கே முட்டுக்கட்டையாக பாடல்கள் உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயம் ரவி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறாராம். அவர் விசாரிக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் இருக்கை நுணுக்கி ரசிகர்களை கொண்டு சேர்த்தது என்றே கூறலாம். சில கொடூரமான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாம். வழக்கம்போல இந்த திரைப்படத்திலும் இடைவெளி காட்சி மிக நன்றாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி நன்றாக உள்ளது என்றும், இருப்பினும் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் கேட்க முடிகிறது. மொத்தத்தில் இறைவன் திரைப்படம் சுமாராகத்தான் உள்ளது என ஒட்டுமொத்த விமர்சனத்தையும் பார்க்கையில் தெரிகிறது.





