மலையாள திரையுலகின் மூத்த இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் இரண்டாவது கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள ஆண்டனி படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு எழுத்தாளர் ராஜேஷ் வர்மா கதை எழுதியுள்ளார். இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் மற்றும் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜோஷியும், ஜோஜு ஜார்ஜும் இணைந்து ஏற்கனவே ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்ற வெற்றி படத்தை கொடுத்திருக்கின்றனர். அந்தப் படத்துக்கு பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ஆண்டனிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள ‘ஆன்டனி’ படம் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இரத்த உறவுகளைவிட இதயத்திற்கு நெருக்கமான உறவுகளை பற்றி இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்களைத் தவிர, விஜயராகவன், பாபநாசம் படத்தில் நடித்த ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி, ஜிஜு ஜான், பத்மராஜ் ரதீஷ், ஆர்.ஜே.ஷன், ராஜேஷ் சர்மா, சுனில் குமார், நிர்மல் பாலாழி, கராத்தே கார்த்தி, சிஜோய் வர்கீஸ், டைனி டாம் மற்றும் மனோஹரியம்மா போன்ற அனுபவமிக்க நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் டீசரானது வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கையில் படம் கடுமையாக ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் ஜோஜு ஜார்ஜின் ஸ்க்ரீன் பிரெசன்ஸும் அட்டகாசமாக இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரெனதீவின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் மனதைக் கவரும் இசை மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் ஆண்டனி படம் உருவாகி உள்ளது. நிச்சயம் இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
‘ஆண்டனி’ படத்தின் முதன்மை இணை இயக்குநராக சிபி ஜோஸ் சாலிசேரியும், ஆக்சன் இயக்குநராக ராஜசேகர் பணிபுரிந்துள்ளனர். எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளர் ஆர்.ஜே.ஷான் உட்பட திறமையான கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். கலை இயக்குநராக திலீப் நாத்தும், காஸ்ட்யூம் டிசைனராக பிரவீன் வர்மாவும் பணியாற்றியிருக்கின்றனர்.





