தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ள அவர் இந்த படத்துடன் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறார். இது அவரது 69வது படமாகும். வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தனது கட்சியின் மாநில மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார். அடுத்ததாக இப்போது மாவட்டம் வாரியாக உங்க விஜய் நா வரேன் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். முதல் நாளான இன்று திருச்சியில் அவர் சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்ற ஒரு இளம் அரசியல்வாதியாக நடிகர் விஜய் இருக்கிறார். திமுக தனது அரசியல் எதிரி என்றும் பாஜக தனது கொள்கை எதிரி என்றும் பகிரங்கமாக மேடைகளில் பேசி வரும் நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் தவெக கட்சிக்கும் திமுக கட்சிக்கும்தான் போட்டி என்றும் கூறி வருகிறார்.
சினிமா நடிகராக பல விமர்சனங்களை சந்தித்து வந்த நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்துக்கு வந்த பிறகும் பல மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக மாலை 6 மணிக்கு பிறகு அவர் ஷூட்டிங்கிலும் பங்கேற்க மாட்டார். அரசியல் கூட்டங்களுக்கும் வர மாட்டார். ஏனெனில் அவருக்கு மாலை 6 மணி ஆகி விட்டாலே மதுப்பழக்கம் இருப்பதால் அதில் மூழ்கி விடுவார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, விஜயகாந்தை எப்படி குடிகாரர் என சித்தரித்து அவரை காலி செய்தார்களோ அதே போல் விஜயையும் குடிகார பட்டம் கட்டுகிறார்கள். அவரை எனக்கு பர்சனலாக ரொம்ப காலமாக தெரியும். அவர் மாலை 7 மணிக்கே இரவு உணவு எடுத்துக் கொள்ளக் கூடியவர். 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் தூங்கிவிடும் பழக்கம் கொண்டவர்.
காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார். முடிந்தவரையில் படப்பிடிப்பு நேரம் கூட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அலுவலகத்துக்கு பணிக்கு சென்று வருவது போல் ஒரு முறையான வாழ்க்கை முறையை அவர் பின்பற்றக் கூடியவர். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக அபாண்டமான பழியை சுமத்துகின்றனர். அவரை நீண்ட காலமாக எனக்கு தெரியும் என்பதால் அவர் மீதான இந்த குற்றச்சாட்டில் சிறிதும் உண்மையில்லை என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





