பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருப்பது தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்குதான். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறார் விஜய்.

இதில், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், அர்ஜுன், அனுராக் காஷ்யப், திரிஷா, பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இதன் சூட்டிங் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லியோவிலிருந்து நா ரெடி தான் பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து சஞ்சய் தத்தின் அறிமுக வீடியோவும், அர்ஜுனின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இதில் சஞ்சய்தத் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்திலும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், லியோ டிரெய்லர் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் விஜய். இதனை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. தளபதி 68 திரைப்படம், அரசியல் திரைப்படம் இல்லை என்றும், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் என்டர்டைன்மெண்டாக இருக்கும் எனவும் வெங்கட் பிரபு ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், சகோதரராக ஜெய்யும் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, ஜோதிகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தில் இடம்பெறுவதற்கு சில நிபந்தனைகளை நடிகை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவுடான திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா, கதாநாயகிக்கு மிக முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதனால் தளபதி 68 திரைப்படத்திலும், தனக்கான ரோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறாராம். அப்படி இருந்தால் மட்டுமே ஜோதிகா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது. முன்னதாக மெர்சல் திரைப்படத்திலும், நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜோதிகாவையே படக்குழு அணுகியதும், ஆனால் சில காரணங்களால் படத்தில் ஜோதிகா நடிக்க முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.





