இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியான படம் அந்த 7 நாட்கள். இதில் கே பாக்யராஜ் அம்பிகா ராஜேஷ் கல்லாப்பட்டி சிங்காரம் காஜா செரீப் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இதில் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் சினிமாவில் இசையமைப்பாளர் வாய்ப்பு தேடுபவராக கே பாக்யராஜ் நடித்திருப்பார்.
சென்னைக்கு காஜா செரீப்புடன் வரும் பாக்யராஜ், கல்லாப்பட்டி சிங்காரம் வீட்டில் வாடகைக்கு தங்குவார். அந்த வீட்டு பெண் அம்பிகா, பாக்யராஜை காதலிப்பார். ஆனால் டாக்டர் ராஜேஷூக்கு ஒரு கட்டத்தில் மனைவியாகி விடுவார். இவர்களது காதல் விவகாரம் ராஜேஷூக்கும் தெரிய வந்துவிடும். கிளைமாக்ஸ் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. கே பாக்யராஜின் மாபெரும் வெற்றிப் படங்களில் இந்த படமும் மிக முக்கியமானது.
பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோ சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம் அந்த 7 நாட்கள். புது முகங்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீ ஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நாயகன் நாயகியாக இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இவர்களுடன் நமோ நாராயணன் சுபாஷினி கண்ணன் தலைவாசல் விஜய் ஏபி ஜனகன் வாசு சீனிவாசன் ராகவன் சாய் கோபி விதுஷ்ணவி ஆதித்யா கவிப்பிரியா ராம்ஜி மோகனா செம்புலி ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த 7 நாட்கள் படத்தை எம் சுந்தர் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.
அந்த 7 நாட்கள் படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியதாவது, இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள் படத்தின் தலைப்புதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுப்பது இயக்குனர் கே பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும் விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார்.
மேலும் அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் சம்மதித்தார். சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்த கதை படமாக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியிருக்கிறார். 34 ஆண்டுகளுக்கு பின் கே பாக்யராஜ் அவர் இயக்கிய படத்தின் டைட்டிலில் அவரே நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





