இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில் நுட்ப பணிகளுக்காக சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் நடிகர் சிவகார்த்திகேயனும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன்தான் இந்த படத்தில் 2வது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் சிம்புவுக்கும் ஜோடியாக நடித்தவர்.
இப்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். ஆகவே சிவகார்த்திகேயனுக்கு 2வது முறையாக ஜோடியாகவும், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 2வது முறையாகவும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த லோகா சாப்டர் 1 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் ஒரு துணிச்சலான கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கல்யாணி பிரியதர்ஷன் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
இப்போது கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் திரவியம் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திரைக்கு வர உள்ள ஜீனி என்ற படத்தில் ரவி மோகனுடன் அவர் நடித்திருக்கிறார். டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் மார்ஷல் என்ற படத்திலும் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 2வது முறையாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க கமிட் ஆன லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. மாநாடு படம் வெற்றி படமாக இருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் அவர் முதலில் நடித்த ஹீரோ படம் சரியாக போகவில்லை. அந்த சென்டிமென்டை இந்த புதிய படம் உடைக்குமா என்ற கேள்வி எஸ்கே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





